வங்கி மோசடி புகார்: மெகுல் சோக்சியின் ரூ.1,200 கோடி சொத்து முடக்கம்

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரியின் உறவினரான மெகுல் சோக்கிக்கு சொந்தமான 41 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். இவற்றின் மதிப்பு 1,217.20 கோடி ரூபாய். 

தலைமறைவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பான புகாரில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான கீதாஞ்சலி ஜெம்ஸ் புரோமோட்டர் நிறுவனத்தின் மெகுல் சோக்சி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். மோசடி புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீரவ் மோடி,மெகுல் சோக்சி மற்றும் மோசடியில் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகின்றன. அதில் பல கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

விழுப்புரத்தில் நிலம் முடக்கம்

மெகுல் சோக்சி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 1,217.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவற்றில், மும்பையில் மட்டும் 15 பிளாட்கள், 17 அலுவலக கட்டடங்கள், கோல்கட்டாவில் வணிக வளாகம், அலிபாக் நகரில் பண்ணை வீடு, நாசிக், நாக்பூர், பன்வன் மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட நிலங்களின் மொத்த பரப்பளவு 231 ஏக்கர். மேலும் தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 170 ஏக்கர் பூங்காவையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments