உ.பியில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 2010-ல் அலகாபாத் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தினமும் விசாரணை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் முதல் விசாரணை பிப். 8-ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் உ.பி.மாநிலம் லக்னோ பல்கலை.யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் உ.பி. ஊர்க்காவல்படை டி.ஜி.பி.யான சூரியகுமார் சுக்லா என்ற ஐ.பி.எஸ்.அதிகாரி கலந்து கொண்டார். அப்போது உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதில் நாங்கள் ராமர் பக்தர்கள், ராமர் எங்களின் தெய்வம், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டியே தீருவோம். ஜெய் ஸ்ரீராம் என உறுதி மொழி ஏற்றனர். இதன் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பல லட்சம் பேர் ஷேர் செய்தனர்.
ஒரு அரசு அதிகாரி இது போன்ற பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று உறுதி மொழி எடுத்தது சரியானது தானா என அரசு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
Comments