மதுரை: தீ விபத்து காரணமாக, மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை எனவும், வீரவசந்தராயர் மண்டபத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று (பிப்.,2) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கோயிலுக்குள் இருந்த 35க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.
தீவிபத்து நடந்த இடத்தில், தொடர்ந்து புகைமூட்டமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கோயிலில், கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒருங்கிணைந்து பணி
பின்னர் கலெக்டர் கூறுகையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள கடைகளில் நேற்று இரவு தீப்பிடித்த தகவல் வந்த உடனே அனைத்து அதிகாரிகளும் வந்தனர். இரவு ஒரு மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர். வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், கோயில் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், தீ பல இடங்களுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை. 36க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சிறப்பு குழு மூலம் தீவிபத்து நடந்த இடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு இல்லை. 7 ஆயிரம் சதுர அடி கொண்ட வீர வசந்தராயர் மண்டபத்தில் பாதிப்பு உள்ளது. மேற்கூரை, தூண்கள் சேதம் அடைந்துள்ளன.
அந்த பகுதி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. தீயில் கருகிய பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் தலைமையில் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். முதல் கட்ட விசாரணையில் விபத்து என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments