இடைக்கால நிவாரணம் மின் ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு

மின் ஊழியர்கள்,ஸ்டிரைக்,அறிவிப்பு,இடைக்கால நிவாரணம்ஊதிய உயர்வுக்காக, மின் ஊழியர்கள் போராட உள்ளதால், மின் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், ஊழியர், பொறியாளர் என, அனைவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2015 டிச., மாதம் முதல், புதிய ஊதியம் வழங்க வேண்டும். இதற்காக, அதிகாரிகள் குழு, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது; இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

மின் துறை அமைச்சர், தங்கமணி, ஊதிய உயர்வு இறுதியாகும் வரை, மாதம், 2,500 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதற்கு, பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும், அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இடைக்கால நிவாரணத்தை, ஊழியர்கள், பொறியாளர்கள் என, யாரும் ஏற்கவில்லை.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், நேற்று மதியம், சில ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். முக்கிய தொழிற்சங்கமான, மின் ஊழியர் மத்திய அமைப்பு, வரும், 16ல், வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வுக்காக, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், பஸ் சேவை முடங்கியது. அதே கோரிக்கையை வலியுறுத்தி, தற்போது, மின் ஊழியர்களும் போராட்டம் அறிவித்துள்ளதால், மின் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொது செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது: அதிகாரிகள், 2017 அக்., 21ல் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக ஆலோசனை வழங்கினர். அதை அறிவிக்க தாமதமாவதால், ஜன., 23ல், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. உடனே, 22ல், தொழிலாளர் ஆணையர், அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் என, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில், பிப்., 12க்குள், ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் காணப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.

அதற்கான பணிகளை துவக்காததால், பிப்., 16ல், 10 சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன. திடீரென, அமைச்சர் தங்கமணி, இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளார். அதை, யாரும் ஏற்கவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக, ஏற்கனவே கூறியபடி, 12ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும். இல்லையெனில், 16ல், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

அதில், 50 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பர். இதை வலியுறுத்தி, வரும், 6, 8ம் தேதிகளில், மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இதனால், மின் கட்டண மையங்கள் செயல்படாது. மின் வாரியத்திற்கும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., தொழிற்சங்கம் மீது ஸ்டாலினிடம் புகார் கடிதம்:

மின் வாரியத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட, 17 தொழிற்சங்கங்கள் உள்ளன. அவை, அனைத்தும், 2.57 சதவீத ஊதிய உயர்வுடன், நிலுவை தொகை கேட்டு போராடின.

இந்நிலையில், அமைச்சர் அறிவித்த இடைக்கால நிவாரணத்துக்கு, தி.மு.க., தொழிற்சங்கம் ஒப்புதல் தெரிவித்து, கையெழுத்திட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.,வை சேர்ந்த ஊழியர்கள், கட்சி செயல் தலைவர், ஸ்டாலினுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியுள்ளதாவது: ஆளுங்கட்சி சங்கத்தினர், அரசுக்கு பயந்து, இடைக்கால நிவாரணத்தை ஏற்றனர். அந்த முடிவை, அவர்களின் சங்க உறுப்பினர்களே ஏற்கவில்லை. போக்குவரத்து கழக போராட்டத்திற்கு தலைமை வகித்த, தி.மு.க., தொழிற்சங்கம், மின் வாரியத்தில், பின் வாங்கியது ஏன். எங்களின் கருத்தை கேட்காமல், இடைக்கால நிவாரணத்திற்கு ஒப்புதல் தெரிவித்த, நம் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Comments