குட்கா விவகாரத்தில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு- திமுக வெளிநடப்பு

DMK walks out over Gutka scam சென்னை: குட்கா ஊழல் விசாரணை அதிகாரியை மாற்றியது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை விசாரித்து வந்தார் ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி. ஆனால் திடீரென ஜெயக்கொடி நேற்று மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், அதிகாரிகளை மாற்றுவது அரசின் உரிமை என கூறினார். இதனைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்றுவதற்காகவே ஜெயக்கொடி மாற்றப்பட்டிருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார் என்றார்.

Comments