
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, ஸ்ரீமுஷ்ணம், திருவையாறில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments