போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை.. எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு ஏன்?.. ஸ்டாலின் கேள்வி

DMK opposes MLA increment bill in assembly சென்னை: சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றபின் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் அவையை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் மூலம் எம்.எல்.ஏக்கள் ஊதியம் 55 ஆயிரத்தில் இருந்து 1.05லட்சமாக உயரும்.

இந்த மசோதாவிற்கு திமுக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து பேசவும் திமுக கட்சி அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் குட்கா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவும் திமுக அனுமதிக்கப்படவில்லை. இதனால் திமுக கட்சியினர் உடனடியாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஸ்டாலின் ''போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனை இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு மசோதா அவசியமா?'' என்று கேள்வி எழுப்பினார். இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments