சி.ஐ.டி.யு., பதில் மனு
ஓய்வூதிய நிலுவை தொகை வழங்காதது, சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. இந்த சூழ்நிலையில், இப்பிரச்னை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ' வேலை நிறுத்தம் தொடர்பாக பிப்., மாதமே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. இப்பிரச்னை 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஓய்வூதிய நிலுவை தொகை, பணிக்கொடை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில், நிலுவைதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கண்டிப்பு
அரசுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். போராட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அரசு பஸ் ஊழியர்களுக்கு தெரியுமா; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதிய நிலுவை தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்த வழக்கை மாற்று அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஊழியர்கள் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் வழங்க முடியாவிட்டால் போக்குவரத்து கழகத்தை கலைத்துவிட்டு தனியார் மயக்கலாமே என்றும் நீதிபதி கூறினார். அதே நேரத்தில் ஸ்டிரைக் நடத்தக்கூடாது என்ற தடை நீடிக்கிறது.
Comments