
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள், கடந்த 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையை சேர்ந்தவர் கணேசன், 50. தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 7 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது நடந்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
நேற்று மதியம் பண்பொழி - செங்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அவரது தோப்புக்கு கணேசன் சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அவ்வழியாக சென்ற தேன்பொத்தையை சேர்ந்த சிலர், கணேசன் மாமரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோரிக்கையை அரசு ஏற்காமல் ஸ்டிரைக் நீடிக்கும் மனஉளைச்சலிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கண்டக்டர் செந்தில் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே, மைலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ், 46. அரசு பஸ் டிரைவர். கடந்த, 14 ஆண்டுகளாக பவானி பணிமனையில் பணிபுரிந்தார். தொ.மு.ச நிர்வாகியான இவர் தற்போது நடந்து வரும், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக அரசு அனுப்பிய நோட்டீஸ் நேற்று தேவராஜுக்கு கிடைத்தது. இதனால், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். தகவலறிந்த பவானி அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Comments