பணப்பட்டுவாடா: ஆர்.கே.,நகரில் பரபரப்பு: பார்வையாளர் எச்சரிக்கை

ஆர்கே நகர், தேர்தல் ஆணையம், பத்ரா, பணப்பட்டுவாடா, எச்சரிக்கைசென்னை: வரும் 21 ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வரத்துவங்கியுள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சியினரும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா கூறியுள்ளார்.

கண்காணிப்பு

ஆர்கே நகர் தேர்தல் குறித்து நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா இன்று சென்னை வந்தார். பின்னர், பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது நிருபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்கே நகரில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திமுக புகார்:

இதனிடையே, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் பத்ராவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர் ஒருவரக்கு ரூ. 6 ஆயிரம் தரப்படுவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சோதனை

அண்ணா நகர் கொருக்குப்பேட்டையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவர் பணம் விநியோகம் செய்யவில்லை எனக்கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கலைந்து செல்லாத பெண்களை, மகளிர் போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தண்டையார்ப்பேட்டையில், ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திமுகவினர் அவரை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து சென்றனர்.

குடிசை மாற்றுவாரியத்தில் பணம் கொடுப்பதாக, கிடைத்த தகவலை தொடர்ந்து ஒரு வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டிற்குள் சென்று பூட்டு போட்டு கொண்டார். போலீசார் வந்து அந்த நபரை பிடித்து சென்றனர். ஆனால், பணத்தை பறிமுதல் செய்யாமல் ஆளை மட்டும் பிடித்து செல்வதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 ஆயிரம் ரூபாய் கட்டுகளை விநியோகம் செய்த அதிமுகவினரிடம் திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேதாஜி நகர், கருணாநிதி நகர், சாஸ்தரி நகரில் பணம் கொடுத்ததாக 3 பேரை பிடித்து திமுகவினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தண்டையார்ப்பேட்டையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

ஆர்கே நகர் போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள வீடு ஒன்றில் பணம் பதுக்கி வைத்து விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பறக்கும் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Comments