மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும், பல ஆண்டுகளாக பிரச்னை இருக்கிறது. 1967-ல், மத்திய கிழக்கு போர் நடந்த போது, ஜோர்டான் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெருசலேமை, இஸ்ரேல் கைப்பற்றியது.
வாக்குறுதி
அதன்பின், ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என, அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், 'எதிர் காலத்தில், கிழக்கு ஜெருசலேம், எங்கள் தலைநகராக இருக்கும்' என, கூறுகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள், ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளின் துாதரகங்கள், டெல் அவிவ் நகரில் செயல்படுகின்றன.இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர், டிரம்ப் அங்கிகரித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது: ஜெருசலேம், யூதர்களின் தலைநகராக, பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இப்போது, அங்கு முக்கியமான அமைச்சகங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவை செயல்படுகின்றன.
'இஸ்ரேல் தலைநகராக, ஜெருசலேமை அங்கீகரிப்போம்' என, இதற்கு முன், அமெரிக்க அதிபர்களாக இருந்த பலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது, டிரம்ப் தான்.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்காமல், 20 ஆண்டுகளுக்கும்மேலாக இருந்ததில், எந்த பலனும் ஏற்படவில்லை. ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததால், இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதி பேச்சு பாதிக்காது என, டிரம்ப் கருதுகிறார்.
டெல் அவிவில் இருக்கும் அமெரிக்க துாதரகத்தை, ஜெருசலேமிற்கு மாற்றும் படியும், வெளியுறவு அமைச்சகத்திற்கு , டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பல நாடுகள் எதிர்ப்பு
அமெரிக்க அதிபரின் முடிவுக்கு, 22 நாடுகளை உறுப்பினர்களாக உடைய, அரபு லீக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அதன் தலைவர், அகமது அப்துல் கூறுகையில், ''அமெரிக்காவின் நடவடிக்கையால், மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற தன்மை ஏற்படும்.''அமைதி முயற்சிகள் பாதிக்கும்; வன்முறை அதிகரிக்கும். அமெரிக்காவின் நடவடிக்கையை, வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.
லெபனான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாடி கூறுகையில், ''அமெரிக்காவின் நடவடிக்கை, இஸ்லாமிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும்,'' என்றார்.
பாலஸ்தீன அதிபர், அப்பாஸ் கூறுகையில், ''அமெரிக்காவின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அமைதி முயற்சிகளை, அமெரிக்கா சீர்குலைக்கிறது,'' என்றார். பிரான்ஸ் அதிபர், மக்ரோன் கூறுகையில், ''அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவு கவலை அளிக்கிறது. ஜெருசலேம் விவகாரத்துக்கு, அமைதி பேச்சு மூலம் மட்டுமே, தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
சட்டத்தை மீறிய செயல்
துருக்கி அதிபர், எர்டோகன் கூறுகையில், ''ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்பது, சிவப்பு எல்லை கோட்டை தாண்டுவதற்கு சமம். அவ்வாறு ஒரு சூழ்நிலை உருவானால், இஸ்ரேல் உடனான உறவை, துண்டித்துக் கொள்வோம்,'' என்றார்.
கிழக்கு ஜெருசலேமில் தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின், புனித இடங்கள் உள்ளன. கிழக்கு ஜெருசலேமில், இஸ்ரேல் பல குடியிருப்புகளை கட்டி, இரண்டு லட்சம் யூதர்களை குடியேற்றி உள்ளது. இது, சர்வதேச சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.இஸ்ரேலின் தலைநகரமாக, ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதால், கிழக்கு ஜெருசலேமில் உள்ள, இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்கிற, இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு, வலிமை சேர்க்கும்.
Comments