கொளத்தூர் என் செல்லப்பிள்ளை; ஆர்.கே.நகர் என் வளர்ப்பு பிள்ளை: ஸ்டாலின்

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,வைகோ,திருநாவுக்கரசர்சென்னை: ‛கொளத்தூர் என் செல்லப்பிள்ளை; ஆர்.கே.நகர் என் வளர்ப்பு பிள்ளை' என தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காசிமேட்டில் நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

3 குழல் துப்பாக்கிகள்:

ஸ்டாலின் பேசியதாவது: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதல்வர் பார்வையிட செல்லாதது ஏன்? ஆர்.கே.நகரில் காட்டும் அக்கறையை குமரி மீனவர்கள் நலனில் அ.தி.மு.க., ஏன் காட்டவில்லை. மீனவர்கள் கோரிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். நாளை மறுநாள்(டிச.,13) கவர்னரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளோம்.

ஒரு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல் நடப்பது தான் ஆர்.கே.நகரில் தான். டெபாசிட் வாங்க முடியாதவர்கள் தான் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தை மூடி மறைத்தவர்கள் தான் சசிகலா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., என்ற 3 குழல் துப்பாக்கிகள். ஆர்.கே.நகரில் மானிய விலை ஸ்கூட்டர் வழங்க அ.தி.மு.க., எம்.பி., டோக்கன் வழங்கி வருகிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க., களத்தில் இறங்கும்.

கடந்த கால வேறுபாடுகளை மறந்து தமிழகத்தை காப்பாற்ற எதிர்கட்சிகள் இணைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் அநீதிகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற இந்த மேடை அவசியம். கொளத்தூர் என் செல்லப்பிள்ளை; ஆர்.கே.நகர் என் வளர்ப்பு பிள்ளை. ஆர்.கே.நகரில் தி.மு.க.,வை வெற்றி பெற வைத்து சட்டமன்ற உறுப்பினராக அமர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வைகோ ஆருடம்:

வைகோ பேசியதாவது: ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் காலம் வெகு விரைவில் வரும். பெரியார், அண்ணா வாழ்ந்த பூமியில் மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை ஆட்சி செய்வது முதல்வரா இல்லை கவர்னரா என அவர் கேள்வி எழுப்பினார்.

வேறு ஆளில்லை:

திருநாவுக்கரசர் பேசியதாவது: டில்லியில் ராகுலை விற்றால் எப்படி வேறு வழியில்லையோ அதே போல் தமிழகத்தில் ஸ்டாலினை விட்டால் வேறு வழியில்லை. நாட்டை காப்பாற்ற ராகுல் தலைவரானது போல், தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலின் முதல்வராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் கறையை துடைத்த வைகோ:

பொதுக்கூட்டத்தின் போது டீ குடித்த ஸ்டாலின் தனது வேட்டியில் தெரியாமல் சிந்தினார். இதனால் ஏற்பட்ட கறையை கண்ட வைகோ, பதைபதைப்புடன் அதை தனது துண்டால் துடைத்தார். இந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments