புதுடில்லி: சமீபத்தில் சென்னையில் பல கோடி குவித்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மணல் குத்தகைக்காரர் சேகர்ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சில அமைச்சர்கள் மற்றும் மேலும் சசியின் உறவினர்கள் மகாதேவன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த டைரி வருமான வரி துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளது.
சிபிஐ விசாரணை தேவை : ஸ்டாலின்
இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சேகர் ரெட்டி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி அனைத்து உண்மைகளும் வெளிவர சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அது போன்ற டைரி ஏதும் இல்லை என அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் ஆங்கில பத்திரிக்கைகள் பலவற்றிலும் இது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
நான் சென்னை மேயராக இருந்த போது ஆர்.கே.நகரில் பல சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நல திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தெரியாமல் முதல்வர் என் மீது குற்றம்சாட்டுகிறார். இனிமேல் ஆர்.கே.நகரில் நாள்தோறும் ஆய்வு நடத்தி, வளர்ச்சி பணிகள் செய்வோம் என்று சொல்வதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த பணிகளையும் செய்யவில்லை என அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணம் கொடுக்கவில்லை; ரெட்டி
இது தொடர்பாக சேகர்ரெட்டி மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. அது என்னுடைய எழுத்தும் இல்லை. வேறு வழி இல்லாததால் நான் பதில் சொல்கிறேன். முறையான வரி செலுத்தியிருக்கிறேன்.
நாடு முழுவதும் நான் தொழில் செய்து வருகிறேன். நாள்தோறும் ஒன்றரை கோடி அளவில் பண பரிவர்த்தனை செய்கிறோம். எங்கள் கம்பெனியில் 3 வருட வருமானத்தில் 315 கோடிக்கு வரி செலுத்தியிருக்கிறோம். டீசல், டயர் உள்ளிட்ட எது வாங்கினாலும் செக் மூலம் தான் பரிவர்த்தனை நடந்துள்ளது. ரிட்டன் பைல் செய்துள்ளோம். நான் எந்த அமைச்சரிடமும் போய் நின்றதில்லை. எல்லாம் கோர்ட்டில் இருக்கிறது. தீர்ப்பு வரட்டும் பார்ப்போம். நான் நேர்மையான முறையில் தொழில் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments