சேகர் ரெட்டி விலைக்கு வாங்கிய தமிழக அமைச்சர்கள்!

மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் டைரி ஒன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு கிடைத்ததாகவும், அதில் தமிழ்நாடு அதிமுக அமைச்சர்கள் அனைவருக்கும் லஞ்சம் கொடுத்த விவரங்கள் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. 

மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இறந்தபிறகு சேகர் ரெட்டியின் வீட்டிலும், நிறுவனங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும், தங்கம் மற்றும் வைரக்குவியலும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

முன்னாள் முதல்வரும், இன்றைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமிதான் சேகர் ரெட்டி என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக அமைச்சர்களுக்கோ ஓ.பி.எஸ்.ஸுக்கோ தன்னுடன் தொடர்பில்லை என்று சேகர் ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் கூறியிருந்தார். 

திடீரென்று ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சேகர் ரெட்டியின் இந்த விளம்பரம் அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியை ஆதாரமாகக் கொண்டு, தமிழக அமைச்சர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையிலான பணப்பட்டுவாடா விவரங்களை வெளியிட்டு வருகிறது.

Comments