போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை : தமிழகம் முழுவதும் ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த போராட்டம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். நிர்வாகிகளின் இந்த அறிவிப்பிற்கு தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சென்னையில் பல்லவன் இல்லம் முன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல்லவன் சாலை வழியாக வந்த சில பஸ்கள் மீத கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடலூரிலும் போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரையிலும் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு எதிராக பஸ் மறியலில் ஈடுபட்டனர். பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

தற்காலிக வாபஸ்:

சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக எங்களது போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். தங்களுடைய முடிவை பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகளின் முடிவை ஏற்று நாளை(டிச.,16) தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments