சொந்த தொகுதியில் காணாமல் போன எம்எல்ஏ., - ஆர்.கே.நகரில் குத்தாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி (தனி) அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுமுகம் தொகுதிப் பக்கம் வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ ஆறுமுகம் இவர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்ததோடு சரி, அதன் பின் தொகுதி பக்கம் வரவில்லை. கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏவின் அலுவலகமும் திறக்கவில்லை. எனவே காணாமல் போன எங்கள் தொகுதி எம்எல்ஏ., ஆறுமுகத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என தென் இந்திய பார்வர்டு பிளாக் தொண்டரணி மாநில இணைச் செயலாளர் கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ் காந்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த 27ஆம் தேதி மனு கொடுத்தார். 

அதன் பிறகும் அலுவலகம் திறக்கப்படாத நிலையில் உள்ளது, இந்த நிலையில் ஆர்.கே நகரில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டையில் காணவில்லை என்று மனு கொடுக்கப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ., ஆறுமுகம் திறந்த ஜீப்பில் நின்று குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த தொகுதி மக்கள் கந்தர்வகோட்டையில் காணாமல் போன எம்.எல்.ஏ ஆறுமுகம் ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையில் இருக்கிறார். அவரை கண்டுபிடித்து தொகுதிக்கு அழைத்து வருமாறு,ஊர் மக்கள் அனைவரும் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க தயாராகி வருகின்றனர்.

Comments