காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4 ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது. கடைசி நாளான டிசம்பர் 4 அன்று ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 11 எனவும் கூறப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு ராகுலை தவிர வேறும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் ராகுலை தவிர வேறும் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ராகுலுடன் சேர்ந்த மொத்த 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் செல்லத்தக்கவை. இவை அனைத்தும் ராகுலை கட்சியின் தலைவராக முன்மொழிந்தே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனால் ராகுல் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக காங்., தலைவராக சோனியா இருந்து வந்தார். தற்போது ஒருமனதாக ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் 16 ம் தேதி கட்சியின் 87 வது தலைவராக பதவியேற்க உள்ளார். நேரு குடும்பத்தில் இருந்து, காங்., கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் 6வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments