குமரி மீனவர்கள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து

Due to the Fishermen Protest on Kuzhiturai Railway Station Train timings Changed
கன்னியாகுமரி : குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த வழியாகப் பயணிக்கும் ஐந்து ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத்தொகை அதிகரித்து வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை வைத்து மீனவர்கள் பலர் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இதனால், அந்த வழியாக செல்ல இருந்த ரயில்களின் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் : 22627 திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. 66304 கொச்சி - கன்னியாகுமரி பாசஞ்சர் ரயில் சேவை நெய்யாற்றங்கரை வரை மட்டுமே இயக்கப்படும். 66305 கன்னியாகுமரி - கொச்சி பாசஞ்சர் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. 56304 நாகர்கோவில் - கோட்டயம் பாசஞ்சர் ரயில் எர்ணாகுளம் - திருவனந்தபுரம் பாதையில் இயக்கப்படும். 56317 கொச்சுவேலி - நாகர்கோவில் இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் பயண விபரம் : 22628 திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தற்போது பரசாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இது மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி இயக்கப்பட உள்ளது. 16526 பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பயண நேரம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments