புதுடில்லி: 'நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளுக்கான தடையில் இருந்து, நகர்ப்புறங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
தடை:
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயக்குவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 'நகர்ப்புறங்களுக்கு இந்த தடை பொருந்தாது' என, உச்ச நீதிமன்றம், ஜூலை, 11ல் உத்தரவிட்டிருந்தது. அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டார்.
பொருந்தாது:
இதற்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று அளித்த விளக்கம்: சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 2016 டிச., 15ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினோம். கடந்தாண்டு அளித்த தீர்ப்பிலேயே, நகர்ப்புறங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது தெளிவாக உள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களுக்கு விலக்கு என்பது, நாடு முழுவதற்கும் பொருந்தும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
Comments