மவுசு குறையும், 'அம்மா' குடிநீர் தரம் போச்சு: பயணியர் புகார்

 மவுசு,குறையும்,அம்மா குடிநீர்,தரம்,போச்சு,பயணியர்,புகார்அம்மா குடிநீர் தரம் மற்றும் சுவை குறைந்து வருவதாக பயணியர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விற்பனையும் கணிசமாக குறைந்து வருகிறது.

ஏழை, எளிய மக்களும் பாதுகாப்பான குடிநீர் பருகிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஒரு லிட்டர் தண்ணீர், 10 ரூபாய் விலையில், அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 செப்., 15ல் துவக்கி வைத்தார்.இதற்காக, அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கர் பரப்பளவில், 10.5 கோடி ரூபாயில்,'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

குற்றச்சாட்டு

இந்த குடிநீர் ஆலையில் தினமும், 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து செல்லகூடிய அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களில் பஸ் ஸ்டாண்டுகளுக்கு தலா, ஒரு விற்பனை நிலையமும் மற்றும் சட்டசபை தொகுதிக்கு ஒரு விற்பனை நிலையம் என, 500க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.

தனியார்குடிநீர் பாட்டில், 1 லிட்டர், 20 முதல் 25 ரூபாய் வரை விற்கும் நிலையில், அம்மா குடிநீர், 10க்கு விற்பனையானதால், மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.கோடை காலத்தில், பஸ் பயணியர் கையில் அம்மா குடிநீர் பாட்டில்களை அதிகம் காண முடிந்தது.தனியார் நிறுவனத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான தரத்துடன் இருந்த அம்மா குடிநீர், தற்போது, சாதாரண தண்ணீர் குடித்தது போல் இருப்பதாக பயணியர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விற்பனை குறைவு

அக்., 17ல் தயாரிக்கப்பட்ட அம்மா குடிநீர் பாட்டில் களே, தற்போது, பெரும்பாலான அம்மா குடிநீர் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அம்மா குடிநீர் பாட்டில்களை தொடர்ந்து வாங்கிபயன்படுத்திய பயணியர், தற்போது வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டில்களின் விற்பனையும் குறைந்து உள்ளது. உதாரணமாக கடந்த காலங் களில் நாளொன்றுக்கு, 1,000 பாட்டில் கள் விற்பனை ஆன நிலையங்களில், 500 பாட்டில் கள் விற்பனை ஆவதே சிரமமாக உள்ளதாக, விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், விற்பனை நிலையங்களில் பாட்டில்கள் பண்டல் பண்டலாக தேங்கி கிடக்கின்றன. கடந்த காலங்களில், தயாரிக்கப்பட்ட ஒரு வாரத்துக் குள் விற்பனைசெய்யப்பட்டு வந்த பாட்டில்கள், தற்போது, ஒரு மாதம் ஆன பின்னரும் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளன.

கோரிக்கை

அம்மா குடிநீர் வாங்கி குடிக்கும் பயணியர் பலர், தண்ணீரின் சுவை மாறி இருப்பதாக விற்பனை நிலைய பணியாளர்களிடம் சுட்டிக்காட்டி குறை கூறுகின்றனர். தரம் மற்றும் குறைவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அம்மா குடிநீரை ஆய்வுக்குட்படுத்தி, தரமான, சுவை யான அம்மா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Comments