உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை.. ஹைகோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையர் நிபந்தனையற்ற மன்னிப்பு

Tamilnadu state election commission apologize before High court
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வந்தது. அதில், திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்டவையும் இணைத்து விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 4 அன்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், செப்டம்பர் 18க்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நவம்பர் 17க்குள் தேர்தலை நடத்தவேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதன் தீர்ப்புக்கு உட்பட்டு இந்த தீர்ப்பு இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. ஹைகோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று திமுக சார்பில் அதன் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அந்த மனுவில் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Comments