முப்பெரும் விழாவுக்கு வராத ஓ.பி.எஸ்., : எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு வந்தது எப்படி?

ஓ.பன்னீர்செல்வம், முப்பெரும் விழா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாசென்னை: இரட்டை இலை சின்னம் கிடைத்ததும், பழனிச்சாமி தரப்பினர் தங்களை முழுமையாக புறக்கணிப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புலம்பத் துவங்கி உள்ளனர். அதற்கு ஏற்றார்போல, மதுரை தோப்பூரில் நடந்த கட்சியின் முப்பெரும் விழாவிற்கு, ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாததால், அவரது அணியை சேர்ந்தவர்கள், விழாவை முழுவதுமாக புறக்கணித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என செய்தி பரவியது.

இப்படியொரு செய்தி பரவியதும், பதறிப் போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெரியகுளத்தில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, தோப்பூர் நிகழ்ச்சியில் உங்கள் தரப்பினரை புறக்கணிக்கச் சொல்லி நான் உத்தரவிடவில்லை. மதுரையின் லோக்கல் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்தான், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்காதது, கடைசி நேரத்தில்தான் எனக்கு தெரியும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது குறித்து கடிந்து கொண்டேன். இனி, இது போல சம்பவம் நடக்காது; வாய்ப்பில்லை. ராமநாதபுரம், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு நீங்கள் வராமல் இருந்து விட்டால், மனக் குமுறல்; பழி வாங்கல்; புறக்கணிப்பு என தாறுமாறாக செய்தி வரும். அது, ஒன்றுபட்டு இருக்கும் அ.தி.மு.க., தொண்டர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்; அதனால், அவசியம் விழாவுக்கு வாருங்கள் என கேட்டுக் கொண்டார்.

அதையடுத்தே, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வந்திருக்கிறார். இருந்தாலும், பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரிடையே ஏற்பட்டிருக்கும் விரிசல், கூடிக் கொண்டே செல்கிறது.

Comments