சசிகலாவுக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத் திடம் இருந்து, மது வகைகள் கொள்முதல் செய்வதை, 'டாஸ்மாக்' நிறுத்தியது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும், அயல்நாட்டு மது வகைகள்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளை கொள்முதல் செய்கிறது.இதன்படி, மாதத்திற்கு சராசரியாக, 48 லட்சம் பெட்டி மது வகைகளை, டாஸ்மாக் வாங்குகிறது. அதில், சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து தான் அதிக பெட்டிகள் வாங்கப்பட்டன.
ஜெயலலிதா மறைவு, தினகரன் மற்றும் முதல்வர் பழனிசாமி இடையில் ஏற்பட்ட மோத லால், மிடாசிடம் இருந்து வாங்கும் மது வகைகளின் அளவை, சமீபத்தில், டாஸ்மாக் குறைத்தது. இந் நிலையில், நேற்று முதல், மிடாசிடம் இருந்து மது வகைகள் வாங்குவதை, டாஸ்மாக் நிறுத்திஉள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வருமான வரித்துறையினர், மிடாஸ் ஆலையில் சோதனை நடத்தி, பல முறைகேடுகளை கண்டறிந்தனர். இதனால், மிடாசிடம் மது வகைகள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. வருமான வரித் துறை சோதனையில், டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்ததாக, மிடாஸ் தெரிவித்த மது வகைகளுக் கும், அதன் வங்கி கணக்குகளுக்கும், அதிக வேறு பாடு இருப்பதாக தகவல் கிடைத்தது.எனவே, அந் நிறுவனத்திடம் இருந்து, தற்போது மது பாட்டில்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. விசாரணை நடைமுறைகள் முடிந்த பின், மிடாசிடம் இருந்து, மது வகைகள் வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., ஆதிக்கம்
மிடாசுக்கு அடுத்தபடியாக, தி.மு.க., ஆதரவு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அதிக மது வகைகளை, டாஸ்மாக் வாங்கியது. இதற்காக, அதிகாரிகள், ஆட்சியாளர்களின், 'தேவைகளை' அந்த நிறுவனங்கள் பூர்த்தி செய்தன.தற்போது, மிடாசிடம் இருந்து மது வாங்குவது நிறுத்தப்பட்டதால், டாஸ்மாக்கில், தி.மு.க., ஆதரவு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
கடைகளில், அதிகம் விற்பனையாகும் மது வகைகளை கணக்கு எடுத்து, அவற்றை வாங்க, அரசு கவனம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு, 'குடி'மகன் களிடம் எழுந்துள்ளது.
Comments