திருநெல்வேலியில் வரும் 12ம் தேதி எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு விழா நடக்கிறது. விழாவிற்கான செலவுத்தொகையை மேற்கொள்ள அதிகாரிகள் சிக்கல்பட்டுள்ளனர். வழக்கமாக திறந்தவெளி மேடை அமைப்பார்கள்.தற்போது வடகிழக்குபருவமழைக்காலம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் உட்காரும் வகையில்மேற்கூரையுடன் பந்தல் அமைக்கப்படுகிறது.
தெண்டச்செலவு
பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலைகள், பிரமாண்டமான மேடை, மழைநீரை மோட்டாரை வைத்து உறிஞ்சும் பணிகள் ஜரூராக நடக்கிறது. பெரிய கட்அவுட்கள் வைக்கும்போது அதில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு பிறகு நடக்கும் அரசு விழா. இந்த விழாவிலும் முதல்வரை வரவேற்க நெல்லை மாநகரெங்கும் கட்அவுட்கள் வைப்பதற்காக சாலைகளின் ஓரங்களை தோண்டப்பட்டு வருகின்றன. நெல்லையில் மழை பாதிப்பு, டெங்கு காய்ச்சல் என மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குமிங்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இச்சூழலில் நூற்றாண்டு விழாவிற்காக தெண்டச்செலவுகளை செய்துவருகின்றனர். அரசின் 28 துறைஅதிகாரிகளுக்கும் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய விழாக்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை விழாவிற்கு அழைத்துவரக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதால் தற்போது முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி தோறும் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை போட்டி நடத்தி பரிசு வாங்க மாணவ, மாணவிகளை அள்ளிக்கொண்டு வாருங்கள் என கூறப்பட்டுள்ளது. முதல்வரை வரவேற்பதற்காக ரோஜா மலர்களுடன் கல்லூரி மாணவியர்கள் 25 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு தரப்பட்டுள்ளது.
முதல்வரும், துணைமுதல்வரும் அரசின் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்கள். மற்றஅமைச்சர்கள், அதிகாரிகள் தங்க, நெல்லையில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் ஒவ்வொன்றிலும் பத்து அறைகள் இப்போதே புக் செய்து நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் வருகைக்காக ஒரே மாதிரி25 இன்னொவா வெள்ளை நிற கார்கள் ஏற்பாடு செய்து வைக்குமாறு வட்டார போக்குவரத்துஅலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வரும் வழியில் விழாவிற்கு வரும் கட்சியினர்.அமைச்சரின் சகாக்கள் என அனைவரின் வாகனங்களை எந்த சுங்கச்சாவடிகளிலும்பணம் வசூலிக்காமல் அனுப்புவதற்கான பொறுப்பு நெடுஞ்சாலைத்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.விழாவிற்கு மழை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக வந்தது என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக எல்லா துறைகளில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 15 தாசில்தார்களும் தங்கள் பகுதியில் தலா 500 பயனாளிகளை தேர்வு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும். அவர்களை காலையில் வாகனங்களில் அழைத்துவந்து, மதியம் சாப்பாடு கொடுத்து, மாலையில் வீட்டுக்கு வாகனங்களில் ஒப்படைக்கும் வரையிலும் தாசில்தார்களின் கடமையாகும்.
விழாவை கவர் செய்ய வரும் பத்திரிகையாளர்களுக்கு சாப்பாடு, இத்யாதிகளைகவனிக்கும் பொறுப்பு மாவட்ட டாஸ்மாக் மதுபான மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முதல்வர், துணைமுதல்வர்,அமைச்சர்களின் ரத்தப்பிரிவுகளை அறிந்து அந்தந்த ரத்தங்களுடன்டாக்டர்கள் குழு மேடைக்கு அருகிலேயே இருக்கவேண்டும். அமைச்சர்கள், வந்துசெல்லும் வரையிலும் நெல்லையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும், சுற்றுலா மாளிகையிலும் தரமான வழங்கப்படுகிறதா என கவனிக்கும் பொறுப்பு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதிலும் இருந்தும் மக்கள் விழாவிற்கு இலவசமாக வந்துசெல்ல அரசு பஸ்கள், தனியார் பள்ளி,கல்லூரிகளின் பஸ்களை பெற்று அந்தந்த பகுதிகளுக்கு அனுப்புவது வட்டார போக்குவரத்து அலுவலர்களின்பொறுப்பாகும். இந்த விழாவிற்காக இதுவரையிலும் அதிகாரிகள் யாருக்கும் முன்பணம் வழங்கப்படவில்லை. அரசின் இத்தகைய ஏற்பாடுகளால் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
Comments