சென்னை: மதசார்பற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற காரணத்துக்காக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தெரிவித்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மருதுகணேஷை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் மற்ற கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்தார். தம்மை ஆதரித்தமைக்கு இன்று திருமாவளவனை சந்தித்து மருது கணேஷ் நன்றி கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், மதச்சார்பற்ற வாக்கு வங்கி சிதறக் கூடாது என்பதற்காக திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மதவாத சக்திக்கு எதிரான போராட்டம் ஆகும். இடதுசாரிகளும் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
Comments