கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி பரபர பேட்டி

MK Azhagiri replies on returns to DMK சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டு 3 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே அழகிரி கட்சி மாறுவார்; அழகிரியை முன்வைத்து திமுகவை உடைக்கலாம் என்கிற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் அழகிரி கண்டுகொள்ளவே இல்லை. சென்னை கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதி மற்ரும் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மாதம் கருணாநிதியுடன் குடும்ப விழாவில் அழகிரி பங்கேற்றார்.

பின்னர் கருணாநிதியை சந்தித்து மதுரை வீட்டில் வந்து ஓய்வு எடுக்குமாறு அழகிரி கேட்டுக் கொண்டார். இதனிடையே அழகிரி மீண்டும் திமுகவில் சேருகிறார்; மு.க. ஸ்டாலினும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கருணாநிதி விரைவில் அரசியல் பணிகளை மேற்கொள்வார்.

கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றார் அழகிரி.

Comments