சென்னை: ''வருமான வரிதுறை சோதனை யில், உள்நோக்கம் இருப்பதாக தெரிய வில்லை,'' என, ஜெயா, 'டிவி' தலைமை செயல் அதிகாரியும், இளவரசி மகனுமான, விவேக் தெரிவித்தார்.
சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில், அவர் அளித்த பேட்டி:
எங்கள் வீட்டில் மட்டுமின்றி, நாங்கள் சம்பந்தப் பட்ட நிறுவனங்களிலும், சோதனை நடந்தது.
ஜெயா, 'டிவி' மற்றும், 'ஜாஸ் சினிமா' நிறுவனத்தை, இரு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். ஜெயா, 'டிவி'யை, மார்ச்சில் இருந்து பார்த்து வருகிறேன்.
ஜாஸ் சினிமா நிறுவனத்துக்கு, 2015 முதல், தலைமை செயல் அதிகாரியாக உள்ளேன். இது தொடர்பான ஆவணங்களை, ஐந்து நாட்களாக நடந்த சோதனையின் போதுகேட்டனர்; அனைத்திற்கும் விரிவாக, பதில் அளித்துள்ளேன். இது தவிர, என் மனைவிக்கு, திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் குறித்தும் கேட்டனர். அவற்றுக்கு, கணக்கு வைத்து உள்ளேன். அதற்கான ஆவணங்களை, 2 அல்லது 3 நாட்களில் சமர்ப்பித்து விடுவேன்.
வருமான வரிதுறையினர், அவர்களின் கடமையை செய்தனர். பதிலளிக்க வேண்டியது, என் பணி; அதை, சரியாக செய்துஉள்ளேன். சில தினங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள், மீண்டும் விசாரணைக்கு அழைப்பர். அப்போது, என்னிடம் என்ன கேள்வி கேட்கின்றனரோ, அதற்கு பதிலளிக்க, தயாராக உள்ளேன். எனக்கு தெரிந்த தகவல்களை, அப்போது கூறுவேன்.
சில பொதுவான ஆவணங்களை,கம்பெனியில் இருந்து எடுத்துள்ளனர். நிதி சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை கேட்டனர். நாங்கள், திரைப்படங்களை வினியோகம் செய்கிறோம். அது தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் கேட்டனர்.வருமான வரி சோதனை யில்,உள் நோக்கம் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. அவர்கள், தங்கள் பணியை செய்து உள்ளனர். யார் தவறாக பணம் சம்பாதித்து இருந்தாலும், அதற்கு, வருமான வரி செலுத்தியாக வேண்டும்.
அது, நம் கடமை. யார் தவறு செய்திருந்தாலும், அது நானாக இருக்கட்டும், நீங்களாக இருக் கட்டும், ஓர் அமைச்சராக இருக்கட்டும், யாராக இருந்தாலும், வருமான வரி செலுத்துவது, நம் கடமை. அதற்கு, நாம் பொறுப்பானவர்கள். இதைதவிர்த்து,வேறு விதமான பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் எனஅவர் தெரிவித்தார்.
Comments