இந்நிலையில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி, அறிக்கை விடுகின்றன.இது, போக்குவரத்து தொழிலாளிகளிடையே, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எட்டு கோட்டங்கள், 20 மண்டலங்கள், 22 ஆயிரத்து, 700 பஸ்கள், 2.4 லட்சம் ஊழியர்கள் என, தினமும், 2 கோடி பேர் பயணம் என, நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்து துறையாக, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன.
அதே நேரம், தினமும், 8 கோடி ரூபாய் நஷ்டம், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன், 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் அடமானம் என, பரிதாபமான நிலையில் தத்தளிக்கின்றன.மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர், ஹக்கீம் பெற்ற, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி, 2015 - 16ம் நிதியாண்டில், 2,602 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவது, தெரியவந்தது.
மேலும், அதிலிருந்து மீள, சென்னை, மதுரை, கோவை கோட்டங்களின் பணிமனைகள், நிலம், கட்டடங்களின் பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து, 2,458.88 கோடி ரூபாயை, கடனாக பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இந்நிலையில், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டி உள்ளது.
காரணங்கள்:
* தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், 5,000க்கும் அதிகமானோர் வேலை செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர்* டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை வேலை வாங்க,ஒவ்வொரு பிரிவிலும், நிர்வாக இயக்குனர், துணை, இணை, உதவி இயக்குனர்கள், பொது மேலாளர், இணை, கிளை, உதவி, பகுதி மேலாளர் கள், உதவி, துணை, இணை இன்ஜினியர்கள் என, பலர் உள்ளனர். அவர்களின் சம்பளம் மட்டுமே, வசூலில், 70 சதவீதமாக உள்ளது
* 40 லட்சம் மாணவர்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பிரிவினருக்கு, இலவச, 'பஸ் பாஸ்' வழங்கப்படுகிறது. இதற்கான மானியத்தை, அரசு உரிய காலத்தில் செலுத்துவதில்லை
* டீசல் விலை ஏற்றத்தின் போது, அரசு மானியம் முறையாக வழங்கப்படுவதில்லை
* சுங்கச்சாவடிகள் உள்ளிட்டவற்றிற்கு, பெரும் தொகை வரியாக செலுத்தப்படுகிறது
* ஓட்டுனர்,நடத்துனர் பணி நியமனம், இட மாறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும், அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர்.
இதனால், ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, இயக்கத்தில் கவனம் செலுத்துவது இல்லை
* பஸ்களுக்கு கூண்டு கட்டுதல், பழைய பஸ்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, வெளி ஒப்பந்தம் உள்ளது. இதில் ஈடுபடும் நிறுவனம், பெரும் தொகையை லஞ்சமாக கொடுப்பதால், தரத்தை குறைத்து விடுகிறது
* போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆர்.டி.ஓ.,க்கள், அரசியல்வாதிகள், ஆம்னி பஸ்களையும், தனியார் பஸ்களையும் வைத்துள்ளனர். அவர்களுக்கு சாதகமாக, நேரமும் வழித்தடமும் ஒதுக்கப் படுகிறது
* பஸ்களுக்கு காப்பீடு செய்யாததால், நீதிமன்றத் தில் மேல்முறையீடு உள்ளிட்ட செயல் களுக்கும், காப்பீடுக்கும் இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது
* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லைமீள என்ன செய்வது?
* போக்குவரத்து கழக நிலங்களில், கார் பார்க்கிங், பெட்ரோல் பங்க், வணிக வளாகங்களை கட்டி, மாற்று பணியாளர்களை பணிஅமர்த்தலாம்
* சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்து, அரசு ஏற்கலாம்
* உபரி அதிகாரிகள், தொழிற்சங்கத்தினருக்கு வழங்கப்படும் தேவையில்லாத சலுகைகளை களையலாம்
* வட்டியை மட்டுமாவது செலுத்தி, சொத்துகளை மீட்கலாம்.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியிலும், பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டன. தற்போது, பராமரிப்புக்கான பணிமனைகள் அதிகரித்துள்ளன. பணியாளர்களின் சம்பளம், உதிரி பாகங்கள் விலை, டீசல் விலை உயர்ந்துள்ளது. அதனால், கடன் தொகையும் உயர்ந்துள்ளது.
கடன் தொகையை குறைக்கவும், புதிய பஸ்கள் வாங்கவும், அரசு நடவடிக்கை எடுக்கும். டிக்கெட் விலை ஏற்றாதது, அரசின் கொள்கை முடிவு. ஊதிய உயர்வும், நிலுவைதொகையும், டிசம்பருக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., தொழிற்சங்கமான, தொ.மு.ச., செயலர், சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறைக்கு செய்த நன்மைகளை கூட, அ.தி.மு.க., ஆட்சியில் செய்யவில்லை. தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய வைப்பு நிதி, பணிக் கொடை உள்ளிட்டவற்றில், 1,652.83 கோடி ரூபாய் நிலுவைத் தொகையில், 950 கோடி ரூபாயை, அரசு செலுத்துவதாக ஒப்பு கொண்டது. ஆனால், அமைச்சர் தன் அறிக்கை யில், 1231.96 கோடி ரூபாய் என, குறைத்து உள்ளார். அவர் வழங்குவதாக சொன்ன, 700 கோடி ரூபாயை, இதுவரை வழங்கவில்லை. தற்போது அது, 1,450 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.
மேலும், நீதிமன்றத்தில், 950 கோடி ரூபாயை வழங்கியதாக கூறி விட்டு, 2,121 கோடி ரூபாய் வழங்கியதாக, பொய்யான அறிக்கை விடு கிறார்.மருத்துவ, இன்ஜினியரிங் கல்லுாரிகள், போக்குவரத்து கழகங்களின் லாபத்திலும், தொழிலாளர்களின் பங்கிலும் நிறுவப்பட்டது. அதை, அ.தி.மு.க., வினர், அரசுக்கு தாரை வார்த்து, தொழிலாளர்களின் நலனை பறித்து விட்டனர்.பணிமனைகளை பராமரிக்காமல், பொறையாறு பணிமனை கட்டட விபத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், ஜூன் வரை, தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாக, போக்குவரத்து செயலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த கணக்குப்படி, ரூ.17.65 கோடி . அதாவது, ஓய்வு பெற்றோருக்கு, 1,136.66 கோடி ரூபாய்; விபத்து வழக்குகளுக்காக,ரூ.724.59 கோடி ; வங்கிகளில் கடன் பெற்றது, ரூ.8,864.09 கோடி ; டீசல் மானியம், வரி பாக்கி, ரூ.544.94 கோடி.
Comments