எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் உறுதி.. இந்த லாஜிக்கை பாருங்க!

குஷியில் தொண்டர்கள் சென்னை: பீகார் லாஜிக்படி இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் குஷியில் உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், மறுநாளே பாஜக ஆதரவுடன் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

தேர்தல் ஆணையத்தில் வழக்கு

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கடும் அதிருப்தி அடைந்தார். நிதிஷ் குமாருக்கு எதிராக சரத் யாதவ், தேர்தல் கமிஷனில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தார்.

நிதிஷ்குமாரும் கோரிக்கை

'கட்சியின் பெரும்பாலான தேசிய நிர்வாகிகள், எங்களிடம் உள்ளதால், நாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என அறிவிக்க வேண்டும். கட்சியின் சின்னமான அம்பு சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்' என்று கோரினார். நிதிஷ்குமார் அணியும் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்து, ஆதரவு உறுப்பினர்கள் பட்டியலையும் அளித்தது.

நிதிஷ்குமாருக்கு வெற்றி

இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம் நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கே பெரும்பான்மை இருப்பதால் ஐக்கிய ஜனதா தள் கட்சி பெயரும் அதன் அம்பு சின்னமும் ஒதுக்கப்படுவதாக நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள் கட்சியை பீகார் மாநில கட்சியாகவும் அங்கீகாரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இரட்டை இலை

இப்போது தமிழகம் பக்கம் வரலாம். இரட்டை இலை சின்னத்திற்காக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா தரப்பும் தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன் வைத்துள்ளன. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தீர்ப்பு எப்போது வரும் என்று அதிமுகவினர் காத்திருக்கின்றனர்.

குஷியில் தொண்டர்கள்

இந்த நிலையில்தான் பீகாரில் ஆளும் நிதிஷ்குமாருக்கு சாதகமாக கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டதை போல எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இது தினகரன் அணியினருக்கு பெரும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.

Comments