பா.ஜ.க.,வுக்கு தாவும் அ.தி.மு.க., 'மாஜி'க்கள்

 பா.ஜ, BJP, அ.தி.மு.க., AIADMK,ஜெயலலிதா மறைவு ,Jayalalitha death, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, இரட்டை இலை,irattai ilai, சசிகலா, Sasikala, பன்னீர்செல்வம் ,Panneerselvam,  முரளிதரராவ்,Muralidharao,  பொன். ராதா கிருஷ்ணன், Pon RadhaKrishnan,  தமிழிசை சவுந்தர ராஜன் ,  Thamilisai Soundararajan,ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உருவான, அணிகளின் குழப்பங்கள் தீராததால், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் ஆதரவாளர்களுடன், பா.ஜ.,வில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளனர்.

ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டது. பின், இரு அணிகளும் இணைந்தாலும், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தினகரன், தனி அணியாக செயல்படுகிறார். 

அத்துடன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தனி இயக்கம் துவக்கி நடத்தி வருகிறார். இதனால், கட்சியில் குழப்பங்கள் தொடர்வதோடு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதிலும், குழப்பம் நீடித்து வருகிறது.

இதனால், யார் தலைமையை ஏற்று கட்சி பணிகளிலும், மக்கள் பணிகளிலும் ஈடுபடுவது என்ற முடிவு எடுக்க முடியாமல், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், குழப்பத்தில் உள்ளனர். 

இழுக்க முடிவு

இதுபோன்று, கட்சியில் கோலோச்சியவர்களை, தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநில நிர்வாகிளுக்கு, 'அசைன்மென்ட்' கொடுக்கபட்டுள்ளது. 

குறிப்பாக, மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள, அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்களை இழுக்க, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமையில், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மாநில தலைவர், தமிழிசை சவுந்தர ராஜன் இடம் பெற்ற, குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில், நெல்லை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலர், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, பா.ஜ.,வில் இணைந்தனர். அவரை தொடர்ந்து, அதே மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவரும், பா.ஜ.,வில் இணைவதற்கான பேச்சு முடிந்துள்ளது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, சமீபத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதா முரளிதரராவ் ஆகியோரை சந்தித்து பேசினார். 

தடுக்க முயற்சி

இதைத்தொடர்ந்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகி களுடன், பா.ஜ.,வில் இணைய அவர் தயாராகி வருகிறார். இதேபோன்று, மேலும் பலரும், பா.ஜ.,வில் இணைய திட்டமிட்டு உள்ளனர். இதையறிந்த, முதல்வர் பழனிசாமி, 'அவசரப் பட வேண்டாம்' என, அவர்களை, கட்சி மாறாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இணைந்தார் தி.மு.க., 'மாஜி'

தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., கலிவரதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.,வில் சேர்ந்தார். திருச்சியில் நேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், முகையூர் தொகுதியின், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன், ஆதரவாளர்கள், 47 பேருடன், மத்திய அமைச்சரை சந்தித்து, பா.ஜ.,வில் இணைந்தார். இது தவிர, பா.ம.க.,வில் இருந்தும், 69 பேர் இணைந்தனர்.

Comments