இளவரசி இடங்கள்:
இதில், சசிகலாவின் அண்ணி இளவரசியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் இருந்து, நிறைய ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவருடன் கூடவே இருந்த சசிகலா, நிறைய பணத்தை அரசியலையும்; ஆட்சி-அதிகாரத்தையும் வைத்து சேகரித்தத் தகவல்கள் எங்களுக்கு வந்து கொண்டே தான் இருந்தன. ஜெயலலிதா இறந்ததும், அந்த பணத்தையெல்லாம் பல இடங்களுக்கு கொண்டு சென்று பதுக்குவதாகவும் எங்களுக்கு தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.வரும் தகவல்களையெல்லாம் புறக்கணிக்க மாட்டோம். முதலில் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வோம். வந்த தகவல்களில் 95 சதவீதம் சரியானவையாக இருந்தன.இரு நூறு இடங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினால்தான், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் மற்றும் பணத்தை பிடிக்க முடியும் என்பதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் கடந்த மூன்று மாதங்களாக செய்து, தற்போது, சோதனை நடத்தி வருகிறோம்.நாங்கள் எதிர்பார்த்தது போலவே, குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து, ஏகப்பட்ட பணத்தையும்; ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம். குறிப்பாக, இளவரசி தொடர்புடைய இடங்களில் இருந்துதான், அதிக பணம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலும், இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஏகப்பட்ட சொத்துக்கள் குவிந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவருடைய நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் பலரது வீடுகள்; அலுவலகங்களில் இருந்தும் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.தற்போது நடத்தப்பட்டதைப் போல, இன்னும் 150 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டியிருக்கிறது. எல்லாமே சசிகலா மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்கள்தான். அந்த இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வேண்டும் என்றுதான் நினைத்திருதோம். இதற்கே, இரண்டாயிரம் பேர் வரை, வருமான வரித் துறையில் இருந்து தேவைப்பட்டது. அதற்கு மேல் ஆட்கள் தேவைப்படுவதால், இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக சோதனைகளை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. விரைவில், அடுத்தடுத்தும், சோதனைகள் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments