கிடுகிடு விலையேற்றம் எதிரொலி: சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தம்?

Price hike: Egg distributing to Nutrition Meal scheme may affects
சென்னை : முட்டை விலை உயர்ந்துள்ளதால் பழைய விலைக்கு பண்ணையாளர்கள் வழங்க மறுப்பு தெரிவிப்பதால் சத்துணவில் முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சத்தான உணவில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் நாள்தோறும் ஒரு மாணவருக்கு ஒரு முட்டை என வழங்கப்படுகிறது. அங்கன்வாடி முதல் 10-ஆம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி வாரத்துக்கு 3 கோடி முட்டைகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இத்தனை நாள்களாக ஒரு முட்டை ரூ.4.35-க்கு அந்த நிறுவனம் கொள்முதல் செய்து அரசுக்கு அந்த நிறுவனம் கொடுத்து வந்தது. இந்நிலையில் முட்டை விலை ரூ.5.10 உயர்ந்து விட்டதால் பழைய விலைக்கே தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு கொடுப்பதில் பண்ணையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் முட்டைகளை விநியோகம் செய்வதில் தனியார் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளுக்கான முட்டை வெள்ளிக்கிழமையே அந்தந்த மையங்களுக்கு வரும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஆகியும் இன்னும் முட்டைகள் வராததால் சத்துணவு முட்டை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments