பிரபாகரன் 63-வது பிறந்த நாள்: யாழ். உட்பட உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாக கொண்டாட்டம்!

 ஈரோட்டில்... சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொது இடத்தில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர். அப்போது பிரபாகரனையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின.

பிரபாகரனுக்கு தமிழில் வாழ்த்து முன்னதாக நேற்று மாலை கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு பிரபாகரன் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன. கரு. அண்ணாமலை தலைமையில் பள்ளி குழந்தைகள் பிரபாகரனுக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி கேக் வெட்டி கொண்டாடினர்.

ஈரோட்டில்... பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி வழங்கினர்.

நள்ளிரவில் கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிங்கள ராணுவம் இடித்த பிரபாகரன் வீடு முன்பாக நள்ளிரவில் ராணுவ தடையை உடைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திடீரென பறந்த புலிக்கொடி பிரபாகரன் பிறந்த நாளில் திடீரென வல்வெட்டித்துறையில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டது. வன்னிச்சி அம்மன் கோவில் அருகே இக்கொடி பறக்கவிடப்பட்டது.

பிரபாகரன் வீடு சீரமைப்பு வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த வீடு தமிழர்களின் புனித இடமாக கருதபட்டது. அதை சிங்கள ராணுவம் இடித்தது. இந்த வீட்டை தமிழர்கள் இன்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். பிரபாகரனின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

Comments