சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், குமாரவேல் தாக்கல் செய்த மனு:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அதே ஆண்டு டிச., 5ல், உயிரிழந்ததாக அறிவிக்கபட்டது. அவரின் மரணத்தில், துணைமுதல்வர், பன்னீர்செல்வம் உட்பட, அவர்களது கட்சியினரே, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கபட்டு, விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர, ஜெ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக் கான தேர்தலும் நடத்தன.இந்த தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் படிவங்களில், 15 இடங்களில், ஜெ., தன் கைவிரல் ரேகைகளை, 2016 அக்., 27ல் பதிவிட்டுள்ளார். இந்த கை ரேகைகள், அவர் உயிருடன் இருக்கும்போது பெறப்பட்டதா, இல்லையா என்பது, சந்தேகத்திற்கிடமாகி உள்ளது.
எனவே, அவரது இறப்பு, டிச., 5ம் தேதி தான் நடந்ததா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை, தமிழக அரசு சார்பில் அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்கள் நிவர்த்தி யாகும் வரை, டிச., 5ல், ஜெ., நினைவு தினம் அனுசரிக்கவும், சொத்து குவிப்பு குற்றவாளி என, அறிவிக்கப் பட்ட அவருக்கு, அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கவும், தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Comments