குடிநீர் திட்டத்திற்கு மின் சப்ளை, 'நோ' ரூ.500 கோடி பாக்கியால், 'கிடுக்கிப்பிடி'

குடிநீர் திட்டம்,மின் சப்ளை,நோ,ரூ.500 கோடி,பாக்கி, கிடுக்கிப்பிடி
நிலுவையில் உள்ள, 550 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தினால்தான், திண்டுக்கல்லில், முதல்வர் துவக்கி வைக்க உள்ள, கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, மின் சப்ளை தரப்படும் என, மின் வாரியம், 'கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு, குடிநீர் சப்ளை உள்ளிட்டவற்றிற்கு தேவையான மின்சாரத்தை, மின் வாரியம் சப்ளை செய்கிறது. மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளாக, குடிநீர் வாரியம், 550 கோடி ரூபாய்க்கு மேல், மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளது.

இதையடுத்து, குடிநீர் வாரியத்திற்கு, புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரியம், சமீபத்தில், அதிரடியாக தடை விதித்து, உத்தரவிட்டது. 

அலட்சியம்

இது தொடர்பாக, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இருப்பினும், குடிநீர் வாரியம், மின் கட்டணத்தை செலுத்தாமல் அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், காவிரி ஆற்றின் நீரை ஆதாரமாக வைத்து, கரூரில் இருந்து, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு, தண்ணீர் எடுத்து வரும், கூட்டு குடிநீர் திட்ட திட்டப்பணிகள் முடிந்துள்ளன.

திண்டுக்கல்லில், டிச., 9ல் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.நிலுவை கட்டணத்தை, குடிநீர் வாரியம் செலுத்தாததால், இந்த திட்டத்திற்கு, மின் இணைப்பு வழங்க முடியாது என, மின் வாரியம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மின் அதிகாரிகள் கூறியதாவது:

மின் வாரியத்தின் நிதி நெருக்கடிக்கு, அரசு துறைகள், மின் கட்டணத்தை ஒழுங்காக செலுத் தாதது முக்கிய காரணம். குடிநீர் வாரியம், 550 கோடி ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்துள்ளது. எனவே, புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரியம் தடை விதித்து உத்தரவிட்டது; இதை, முதல்வர் தரப்பும் பாராட்டியது.

ரூ.100 கோடி

இந்நிலையில், திண்டுக்கல் நீர் திட்டத்திற்காக, அம்மாவட்டத்தில் அமைத்துள்ள, 'மோட்டார் பம்ப்' இயக்கும் மையங்களுக்கு, குடிநீர் வாரியம், புதிய மின் இணைப்பு கேட்டு, விண்ணப்பித்துள்ளது. மின் வாரிய உத்தரவை மீறி, இணைப்பு வழங்க முடியாது.குடிநீர் வாரியம், நிலுவைக் கட்டணத்தில், முதற்கட்டமாக, 100 கோடி ரூபாயையாவது செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டினால், முதல்வர் துவக்கி வைக்கும் திட்டமாக இருந்தாலும், எப்படி மின்சாரம் வழங்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழப்பம் ஏற்படுத்தும் மின் பகிர்மான கழகம்

மின் வாரிய உத்தரவை மீறி, அதன் துணை நிறுவனமான, மின் பகிர்மான கழக உயர் பொறுப்பில் உள்ள ஒரு பொறியாளர், 'குடிநீர் வாரியம், மின் கட்டணத்தை செலுத்தா விட்டா லும் பரவாயில்லை; திண்டுக்கல் குடிநீர் திட்டத்திற்கு மின் சப்ளை செய்யுங்கள்' என, மாவட்ட பொறியாளர்களுக்கு நெருக்கடி தருகிறார். இதனால், மின் வாரிய உத்தரவை பிற்பற்றுவதா, மின் பகிர்மான கழக உத்தரவை பின்பற்றுவதா என தெரியாமல், உள்ளூர் அதிகாரிகளும், ஊழியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

Comments