ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை டிச. 31-க்குள் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் மீண்டும் அதிரடி உத்தரவு

Madras HC orders to EC to conduct RK Nagar poll by Dec 31 சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவரது ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தலை ஆணையம் ரத்து செய்து விட்டது.

இதைத் தொடர்ந்து போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாகவும், பணப்பட்டுவாடா தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மருதுகணேஷ் (திமுக வேட்பாளர்) ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார். இதனால் நிலுவையில் உள்ள திமுகவின் வழக்குகளை தாக்கல் முடித்துவைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அந்த வழக்குகளை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று ஆர்.கே,நகர் தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஓராண்டாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளநிலையில் தேர்தலை நடத்த தாமதம் ஏன் என்றும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தேர்தலை நடத்தாமல் தாமதிப்பீர்கள் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து நீதிபதி அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். போலி வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Comments