கர்நாடகாவில், காங்.,கை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் பெங்களூரில், மத்திய சிறையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா குற்றச்சாட்டு அடிப்படையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய் குமார் தலைமையில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், கடந்த வாரம் தங்கள் முழு அறிக்கையை,கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்தனர்.அதில், ரூபா கூறிய குற்றச்சாட்டு உண்மை என, 300 பக்க அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் யார் பெற்றது என்று விசாரிக்க, அரசு உத்தர விட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பெலகாவியில் நடந்து வரும் கர்நாடக மாநில மேலவையில், சட்டசபை குளிர் கால கூட்டத்தொடரில், நேற்று, அரசு தலைமை கொறடா, ஐவான் டிசோசா, போதை மருந்து வினியோகம் குறித்து, கவன ஈர்ப்பு கேள்வியாக கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது: பெங்களூரு மத்திய சிறையில், நடந்ததாக கூறப்படும், சசிகலா முறைகேடுகள் குறித்தும், அறிக்கை வந்துள்ளது. இந்த புகார் வந்த பின், முறைகேடுகள் ஒடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மத்திய சிறை உட்பட, மாநிலத்தின் அனைத்து சிறைகளிலும், கஞ்சா உட்பட போதை பொருட்கள் சப்ளை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments