ஜெ. நினைவிடத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. மெரினாவில் பரபரப்பு!

Students protest at Jayalalitha's memorial place சென்னை: அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்து விட்டது.

இந்நிலையில் அனிதா இறந்தவுடனேயே ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மெரினாவில் மாணவர்கள் திரண்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். வாகனப் போக்குவரத்துக்கும் தடை செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குள் இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென மாணவர்கள் நுழைந்தனர். அங்கு உள்ள தடுப்புகளை தாண்டி சமாதியிலேயே அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments