இடம்பெயரும் எம்.எல்.ஏ.,க்கள் :
எம்.எல்.ஏ.,க்களை தங்க வைப்பது, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து என அனைத்தும் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ., ஒருவரின் மேற்பார்வையில் தான் நடந்து வருகிறது. தினகரனின் ஆதரவாளரான கர்நாடக அதிமுக புகழேந்தியும் இன்று புதுச்சேரி செல்ல உள்ளார். தினகரனின் உத்தரவின் பேரிலேயே இவை அனைத்தும் நடந்து வந்தாலும், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலவே தினகரன் நடந்து வருகிறார்.
தினகரன் வர வாய்ப்பில்லை :
எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி சென்றது முதல், அவர்களை காண தினகரன் புதுச்சேரி செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் உண்மையில், தினகரனுக்கு புதுச்சேரி செல்லும் திட்டம் ஏதும் இல்லை என்றே அவரது நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில், இதற்கும் தனக்கும் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற காட்டி கொள்ளவே தினகரன் விரும்புவதாக கூறப்படுகிறது.
முதல்வரை புறக்கணித்த தினகரன் :
இதற்கிடையில் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவதற்காக தினகரனிடம் பேசுவதற்காக முதல்வர் பழனிசாமி, தினகரனுக்கு போன் செய்ததாக தினகரனின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், முதல்வரின் போனை எடுக்காமல் முதலில் தினகரன் புறக்கணித்துள்ளார். பின்னர் மீண்டும் முதல்வர் போன் செய்த போது, தினகரனின் உதவியாளர் தான் போனை எடுத்துள்ளார். முதல்வரிடம் பேசிய அவர், தினகரன் உங்களிடம் பேச விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் புதுச்சேரியில் தங்கி இருக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம் பேசுங்கள். எம்.எல்.ஏ.,க்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் தினகரனின் முடிவு என கூறி உள்ளார் என்றனர்.
Comments