சென்னை : முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கி, போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதற்கிடையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுக.,வினர் ஜனாதிபதியையும் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு விளக்கம் கேட்க ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்ச்செல்வனும், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ஏழுமலையும் நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தனர்.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்கதமிழ்ச்செல்வன், எங்களுக்கு எம்.எல்.ஏ., பதவியே தேவையில்லை. முதல்வர் இன்று கூட்டி உள்ள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் போதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கமாட்டார்கள். ஸ்லீப்பர் செல்களை மிரட்டுவதற்காகவே எங்களை அழைக்காமல் எம்.எல்.ஏ., கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். வெறும் பத்திரிக்கை செய்திக்காக மட்டுமே முதல்வர் இந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
Comments