ஜெ., மரணத்திற்கு காரணமே சசி குடும்பம் தான் : எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி

ஜெயலலிதா, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, சசிகலா, தினகரன்கோவை : கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, சசிகலா குடும்பத்தையும், தினகரன் ஆதரவாளர்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.அவர் கூறியதாவது : தினகரனும், திவாகரனும் யார்? அவர்கள் அதிமுக.,விற்காக போராடினார்களா, சிறை சென்றார்களா? பொதுக் குழுவை கூட்டும் போது தெரியும் யாருக்கு ஆதரவு உள்ளது என்பது. நாஞ்சில் சம்பத் ஒரு கூட்டத்தில் பேச ரூ.50,000 வாங்குகிறார். அவர் யாசகம் பெற வந்தவர். அதிமுக.,வில் கடுமையாக உழைத்து வரும் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்க சசிகலா யார்? தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்திற்கு அதிமுக.,வில் இனி இடம் கிடையாது.ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி விமர்சிக்க நாஞ்சில் சம்பத்திற்கு என்ன தகுதி உள்ளது. அவர் ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். புகழேந்தி, கர்நாடக அரசியலை மட்டும் பார்க்க வேண்டும். சசிகலா குடும்பத்தால், அவர்களால் வந்த சொத்து குவிப்பு வழக்கின் காரணமாகவே இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்க வேண்டிய ஜெயலலிதா விரைவில் மரணம் அடைந்து விட்டார். இவர்கள் தந்த கஷ்டதாலேயே ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மரணம் அடைந்துள்ளார்.தினகரன் முடிந்தால் ஆட்சியை கலைத்து பார்க்கட்டும். அதிமுக.,வும் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். சசிகலா பேச்சைக் கேட்டு புதுச்சேரி ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சியை கலைத்தால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். அதிமுக பொதுக் குழுவை கூட்ட நாங்கள் தயார். அதில் கலந்து கொண்டு, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவர்கள் தயாராக உள்ளனரா? இவ்வாறு அவர் பேசினார்.

Comments