'சுஷ்மாவை காணவில்லை': போஸ்டர்

சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு துறை அமைச்சர், விதிஷா தொகுதி, எம்.பி., காணவில்லைபோபால்: ம.பி., மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியின் எம்.பி.,யான சுஷ்மா ஸ்வராஜை காணவில்லை என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டரில் கூறப்பட்டுள்ளது என்ன?

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், விதிஷா லோக்சபா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். தற்போது விதிஷா நகரின் பல இடங்களில், 'சுஷ்மாவை காணவில்லை' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
விதிஷா விவசாயிகள் இறந்து வருகின்றனர்; விதிஷாவின் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்; விதிஷாவின் இளைய தலைமுறையினர் வேலை இல்லாமல் உள்ளனர்; விதிஷா மக்கம் அதிருப்தியில் உள்ளனர்; எம்.பி.,யும் காணவில்லை. விதிஷா எம்.பி.,யான சுஷ்மா ஸ்வராஜை எங்காவது பார்த்தால், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் விதிஷா மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதாக தெரிவியுங்கள். காணாமல் போன எம்.பி., பற்றி தகவல் தெரிந்தால், ஆனந்த் பிரதாப் சிங் என்பவரிடம் தெரிவியுங்கள். இவ்வாறு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ., விளக்கம்

இது குறித்து மாவட்ட பா.ஜ., தலைவர் தினேஷ் சோனி கூறுகையில், '' இது எதிர்க்கட்சியினரின் வேலை. சுஷ்மா சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் பயணம் செய்ய கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அவர் போபால் நகருக்கு வந்து தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார்,'' என்றார்.

Comments