வலியுறுத்தல்:
தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இன்று காலை 11 மணியளவில் எதிர்க்கட்சியினர் எம்.பி.,க்கள் கனிமொழி, இளங்கோவன், திருச்சி சிவா, , டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். அப்போது, சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கவர்னரை, ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உரிமையில்லை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல்வர் மெஜாரிட்டி இழந்துவிட்டார். இது குறித்து எதிர்க்கட்சியினர் கவர்னரிடம் மனு அளித்தனர். சட்டசபை கூட்டி, முதல்வர் மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நாங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இந்த அரசு ஆட்சியில் தொடர தார்மீக உரிமையில்லை . இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்திரத்தன்மை கேள்விக்குறி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கவர்னர் முதல்வரை அழைத்து பெரும்பான்மை இருக்கிறதா என நிரூபிக்க சொல்லியிருக்க வேண்டும். ஆனால், செய்யாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை. அதனை செய்யாதது வேதனையாக உள்ளது. அரசியல் சாசன காவலர், இந்தியாவின் முதல் குடிமகன் என்ற முறையில் தலையிட வேண்டும் எனவலியுறுத்தினோம். நாங்கள் சொன்ன வாதங்களை ஜனாதிபதி கேட்டுள்ளார். இதற்கு முடிவு செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார். இன்றைய நெருக்கடியில் தமிழகத்தை மீட்க தொடர்ந்து ஒரு மித்த குரலில் குரல் எழுப்புவோம். கவர்னர் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தவறு:
திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி அளித்த பேட்டி: எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை சந்தித்து அரசுக்கு ஆதரவு இல்லை. வாபஸ் பெற்று கொள்கிறோம் என தனித்தனியாக மனு அளித்தள்ள சூழ்நிலையில், உட்கட்சி விவகாரம் என கவர்னர் சொல்வது தவறு. ஓபிஎஸ் கூறிய போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவர்னர், தற்போது அமைதியாக உள்ளது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளோம். நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். தமிழக அரசில், மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதை அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
Comments