ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை! 28ல் மீண்டும் ஆஜராகிறார்

Karti Chidambaram appears in CBI ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் டெல்லியில் சிபிஐ முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி சுமார் 8 மணி நேரம் விளக்கம் அளித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது சிபிஐ.

ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது சிபிஐ. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகத்தான் வேண்டும் என கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் இரவு 7 மணிக்குதான் விசாரணை நிறைவடைந்தது. 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம், சிபிஐ அலுவலகத்திலிருந்து கிளம்பினார். இதனால் பரபரப்பு நிலவியது. இதனிடையே,கார்த்தி சிதம்பரத்திடம் ஆகஸ்ட் 28ல் மீண்டும் விசாரிக்க உள்ளது சிபிஐ.

Comments