சேரி பேச்சு.. காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் புகார்

 Take action against actress Gayathri and Biggboss, complaint filed
சென்னை : சேரி மக்களை இழிவுபடுத்தியதற்காக நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு போலீசிடம் புகார் அளித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் சேரி மற்றும் மீனவர்கள் குறித்து தவறான கருத்துகளைக் கூறிய நடிகை காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டிவி மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தையை காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருந்தார். இதை கமலும் நேற்று அளித்த பேட்டியில் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments