குழாயில் வெறும் காத்துதாங்க வருது.. தலைநகர் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

காட்சி பொருள்
சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி மக்கள் காலிக்குடங்களுடன் வீதி வீதியாக சென்று தண்ணீர் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. தலைநகரான சென்னையில் கடந்த 1947, 1954, 1968, 1972, 1982, 1983, 2001, 2003 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

தற்போதைய சூழலில் பருவமழை பொய்த்தல், வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டு விட்டன. இதனால் சென்னையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம்

இந்த வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. நாளொன்றுக்கு சென்னைக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் அந்த அளவில் பாதி அளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஏரிகள் வறண்டு விட்டாலும் நெம்மேலி, மீஞ்சூர் உள்ளிட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் நீரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 கோடி லிட்டர் நீரும், 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காற்றுதான் வருகிறது

இந்த தண்ணீரின் அளவு சென்னைக்கு போதுமானதாக இல்லை. வீடுகளில் உள்ள குழாய்களில் நாள்தோறும் தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் சொட்டு சொட்டாக வருகிறது. பல இடங்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் காற்றுதான் வருகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்சி பொருள்

குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. தண்ணீர் வரும் குழாய்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தண்ணீர் வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காலிக் குடங்களுடன் மக்கள் வீதி வீதியாக தண்ணீருக்காக அலையும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. கிடைக்கும்போது தண்ணீரை சேமித்து வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை அமோகமாக உள்ளது.

உதவ முடியாத நிலை

கடந்த 2001-ஆம் ஆண்டில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, ஈரோடு மாவட்டம், காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அது சரக்கு ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதுமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் சென்னைக்கு கைக்கொடுக்க மற்ற மாவட்டங்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Comments