குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

I am standing away for AIADMK merger, says Dinakaran பெங்களூர்: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகதான் நான் 60 நாள்கள் கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்கிறேன். மேலும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெங்களூரில் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் நேற்று காலை திடீரென மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.

மும்பையிலிருந்து டிடிவி தினகரன் பெங்களூருக்கு சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஓபிஎஸ் தலைமையில் எழுபர் குழு அமைக்கப்பட்டுள்ளதால் அது பொதுச் செயலாளர் பதவியைக் காட்டிலும் பெரிய பதவி என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த தினகரன் கூறும்போது, அதிமுக அணிகள் இணைப்புக்காக நான் 60 நாள்கள் விலகி இருக்கிறேன். அதிமுகவின் இரு அணிகளை நிச்சயம் இணைக்க முடியும். பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. எனக்கும் திவாகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தினகரன் தெரிவித்தார்.

Comments