மத்திய கலால் வரி, சேவை வரி துறைகள் இணைந்து, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு துவக்க விழாவை, சென்னை, வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில், நேற்று நடத்தின. அதற்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய, மத்திய கலால், சுங்கத் துறை தீர்ப்பாய துணை தலைவர் சி.ராஜேந்திரன், ''ஜி.எஸ்.டி.,யை விமர்சித்து, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. 'பீட்சாவுக்கு, ௫ சதவீதம் வரி விதிக்கும் அரசு, சாதாரண மக்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய்க்கு, 15 சதவீதம் வரி விதிப்பதா?' என, விமர்சிக்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்களுக்கு, அதிகாரிகள் உடனடி விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி., முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் பேசியதாவது:பாக்கெட்டில் அடைக்கப்படாத கடலை மிட்டாய்க்கு வரி இல்லை. அதேபோல், 20 லட்சம் ரூபாய் ஆண்டு வர்த்தகம் மிகாதவர்கள், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வரமாட்டார்கள். அதனால், குடிசை தொழில் செய்பவர்கள், வரி செலுத்த தேவையில்லை.
எனவே, இது தவறான தகவல். இதேபோல், உரத்திற்கு, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் பாகங்களுக்கு, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பெயர் மாற்றம்!
ஒவ்வொரு ஆண்டும், மத்திய கலால் தினம் மற்றும் சுங்க தினம், நாடு முழுவதும் அத்துறை ஊழியர்களால் கொண்டாடப்படுகிறது. இனி, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி, ஜி.எஸ்.டி., தினமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், மத்திய கலால் வரி அலுவலகம், இனி, 'மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி., அலுவலகம்' என, அழைக்கப்படும். அதற்கேற்ப, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, தமிழக தலைமை அலுவலகத்தில், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Comments