தமிழகத்தில் ஒரே நாளில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள், டிரான்ஸ்பர், போலீஸ், வட்டாரம், பீதி தமிழகத்தில் ஒரே நாளில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை உட்பட பல நகரங்களில் பணியாற்றி வந்த போலீஸ் எஸ்.பி.,கள் திடீரென துாக்கியடிக்கப்பட்டு இருப்பதால் போலீஸ் வட்டாரத்தில் பீதி ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இங்கு பணியாற்றி வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாகி வருகின்றன.

46 பேர் இடமாற்றம்

அதேநேரத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 'டம்மி'யாக வைக்கப்பட்டு இருந்த பல ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளுக்கு வர டில்லி வரை காய் நகர்த்தி வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அவர்களைமாவட்டங்களுக்கு துாக்கியடிக்கும் நடவடிக்கையும் துவங்கியுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு முன் ஜூன் 30ல் 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அடுத்த நாளே 19 ஏ.டி.எஸ்.பி.,களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு டி.எஸ்.பி.,களாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளான 15 ஏ.எஸ்.பி.,கள் திடீரென மாற்றப்பட்டனர். இதேபோல் அடுத்தடுத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவதால் போலீஸ் வட்டாரங்களில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரை கைது செய்ய தீவிரம் காட்டிய ஏ.எஸ்.பி., ஸ்ரீநாத்துக்கு பதவி உயர்வு அளித்து சென்னை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி இருந்தாலும் அது அவருக்கு 'டம்மி' பொறுப்பு என்றே கூறப்படுகிறது. 

'டம்மி' பொறுப்பு

அதேபோல் அ.தி.மு.க., பிரமுகர் கரூர் அன்புநாதன் வீட்டில் துணிச்சலுடன் 'ரெய்டு' நடத்தி ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்த எஸ்.பி., வந்திதா பாண்டே போன்றோர் தொடர்ந்து 'டம்மி' பொறுப்புகளில் வைக்கப்பட்டு இருப்பதும் போலீஸ் வட்டாரங்களில் அதிருப்தியை கிளப்பி உள்ளது. இந்நிலையில் போலீஸ் துறையில் துவங்கியுள்ள இந்த 'டிரான்ஸ்பர்' நடவடிக்கை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வரை நீடிக்கும் என, கூறப்படுகிறது.

Comments