தேர்தல் வழக்கு: வாக்காளர்கள் ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில், மஞ்சேஸ்வர் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கை விசாரித்து வரும் அம்மாநில உயர்நீதிமன்றம், 259 வாக்காளர்கள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

89 ஓட்டுக்கள் வித்தியாசம்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வர் சட்டசபை தொகுதியில், 2016ல் நடந்த தேர்தலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரசாக், பா.ஜ., சார்பில் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், ரசாக்,56, 870 ஓட்டுக்களும், சுரேந்திரன் 56, 781 ஓட்டுக்களும் பெற்றனர். 89 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ரசாக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் சுரேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இறந்தவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஓட்டுக்களை கள்ள ஓட்டுகளாக போட்டு ரசாக் வெற்றி பெற்றுள்ளதாக சுரேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஏ.வி.ராமகிருஷ்ணா பிள்ளை இடம்பெற்ற பெஞ்ச், 259 வாக்காளர்களை ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. வாக்காளர்கள், ஜூன், 8 ம் தேதி ஆஜராக வேண்டும். வாக்காளர்களில் யாராவது ஓட்டுப்பதிவு நாள் அன்று வெளிநாட்டில் இருந்தனரா என்பதை அறிய குடியேற்ற பிரிவு ஆவணங்களையும் ஆராய உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Comments